14 யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
15 யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.
16 அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.
17 அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.
18 அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.
19 உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.
20 அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.