18 அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.
19 பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.
20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
21 அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
23 என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான்.
24 பின்பு தானியேல் பாபிலோனின்ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின்ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.