1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
2 நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
3 துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
4 குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.
6 துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
7 துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.