17 ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,
18 இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான்.
19 அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
20 தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
21 இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.
22 அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
23 அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.