2 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் மட்டுமுள்ள யூதா மனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
3 தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.
4 பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூட வந்து இருக்கவேண்டும் என்றான்.
5 அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்த காலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.
6 அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.
7 அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.
8 அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.