30 அப்னேர் கிபியோனில் நடந்த யுத்தத்திலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.
31 தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.
32 அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில், ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள்.
33 ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
34 உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.
35 பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து: அப்பம் புசியும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும் வேறெதையாகிலும் ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
36 ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.