2 சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
3 சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
4 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
5 இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.
6 அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
7 ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
8 மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.