1 இராஜாக்கள் 1:33-39 தமிழ்

33 அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.

34 அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.

35 அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.

36 அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.

37 கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான்.

38 அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் குமாரன் பெனாயாவும், கிரேத்தியரும் பிலேத்தியரும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டு போனார்கள்.

39 ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.