1 இராஜாக்கள் 15:16-22 தமிழ்

16 ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

17 ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.

18 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:

19 எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.

20 பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரோத் அனைத்தையும் நப்தலியின் முழுத்தேசத்தோடுங்கூட முறிய அடித்தான்.

21 பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவிலிருந்து விட்டான்.

22 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.