1 தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
2 நான் பூலோகத்தார் யாவரும் போகிறவழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு.
3 நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,
4 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
5 செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள கச்சையிலும் தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.
6 ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.
7 கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.