1 இராஜாக்கள் 2:31-37 தமிழ்

31 அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்பண்ணி, இவ்விதமாய் யோவாப் முகாந்தரமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என் பிதாவின் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு.

32 அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டு பேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன்மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.

33 இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவன் சந்ததியாரின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.

34 அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

35 அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.

36 பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.

37 நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்றான்.