24 நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.
25 சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.
26 சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.
27 மேற்சொல்லிய மணியகாரரில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து,
28 குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.
29 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
30 சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.