1 இராஜாக்கள் 6:1-7 தமிழ்

1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.

2 சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது.

3 ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபதுமுழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.

4 பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.

5 அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச் சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.

6 கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்துமுழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறுமுழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காதபடிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.

7 ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.