1 இராஜாக்கள் 8:4-10 தமிழ்

4 பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியரும், லேவியரும், அவைகளைச் சுமந்தார்கள்.

5 ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள்.

6 அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் சந்நிதிஸ்தானமாகிய மகாபரிசுத்தஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்துவைத்தார்கள்.

7 கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

8 தண்டுகளின் முனைகள் சந்நிதிஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள் வரைக்கும் அங்கேதான் இருக்கிறது.

9 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

10 அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.