1 எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
3 அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஒப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.
4 அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான்.
5 அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.