1 சாமுவேல் 11:6-12 தமிழ்

6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,

7 ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.

8 அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.

9 வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு இரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

10 பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.

11 மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள்.

12 அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.