1 சாமுவேல் 14:36-42 தமிழ்

36 அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

37 அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.

38 அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

39 அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.

40 அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.

41 அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.

42 எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.