1 சாமுவேல் 17:26-32 தமிழ்

26 அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.

27 அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.

28 அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

29 அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,

30 அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.

31 தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.

32 தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.