1 அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.
2 சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.
3 யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்.
4 யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.
5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.
6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.