1 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
2 அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.
3 அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.
4 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.