1 சாமுவேல் 20:25-31 தமிழ்

25 ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.

26 ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.

27 அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான்.

28 யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,

29 அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.

30 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?

31 ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.