1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
2 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
3 அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பேர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.
4 நாபால் தன் ஆடுகளை மயிர் கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
5 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,
6 அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,