11 நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.
12 தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.
13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்து விட்டார்கள்.
14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.
15 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.
16 நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.
17 இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.