18 அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:
19 நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
20 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை மடங்கடித்ததினால் இந்த மூன்றுபேரில் பேர்பெற்றவனானான்.
21 இந்த மூன்றுபேரில் அவன் மற்ற இரண்டுபேரிலும் மேன்மையுள்ளவனானதினால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமானமானவனல்ல.
22 பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும், கப்சேயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை பெய்த நாளில் அவன் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
23 ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
24 இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.