1 நாளாகமம் 12:18-24 தமிழ்

18 அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே, உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.

19 சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சயமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சயமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.

20 அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.

21 அந்தத் தண்டுக்கு விரோதமாய் இவர்கள் தாவீதுக்கு உதவி செய்தார்கள்; இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகளும் இராணுவத்தில் சேர்வைக்காரருமாயிருந்தார்கள்.

22 அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.

23 கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:

24 யூதா புத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்த சன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.