1 நாளாகமம் 29:17-23 தமிழ்

17 என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.

18 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.

19 என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

20 அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,

21 கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.

22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம் விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.

23 அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.