1 நாளாகமம் 29:22-28 தமிழ்

22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம் விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.

23 அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.

24 சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.

25 இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

26 இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.

27 அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; எப்ரோனிலே ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.

28 அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.