20 அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21 இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
22 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை.
23 அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
24 தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
25 அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.
26 இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.