2 சாமுவேல் 18:11-17 தமிழ்

11 அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக்கண்டாயே; பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப்போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்.

12 அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.

13 ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால், நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.

14 ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.

15 அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக்கொன்று போட்டார்கள்.

16 அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.

17 அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.