2 சாமுவேல் 21:1-6 தமிழ்

1 தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.

2 அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.

3 ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.

4 அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

5 அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ,

6 அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.