9 முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
10 தரியுவின் இரண்டாம் வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:
11 ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
12 அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
13 பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.
14 அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.
15 இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.