உபாகமம் 2:26-32 தமிழ்

26 அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி:

27 நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி உத்தரவுகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பேன்.

28 சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும், நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும்,

29 எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்து போகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.

30 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்து போகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

31 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார்.

32 சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான்.