உபாகமம் 9:2-8 தமிழ்

2 ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.

3 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

4 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

5 உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

6 ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

7 நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள் முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

8 ஒரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.