எசேக்கியேல் 14:15-21 தமிழ்

15 நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக்கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது,

16 அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

17 அல்லது நான் அந்த தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,

18 அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

19 அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளை நோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,

20 நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

21 ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?