எசேக்கியேல் 28:20-26 தமிழ்

20 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

21 மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சீதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

22 கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

23 நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

24 இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிற முள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள்.

25 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.

26 அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து, நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.