எசேக்கியேல் 33:3-9 தமிழ்

3 இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,

4 எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.

5 அவன் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.

6 காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.

7 மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

8 நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்: ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

9 துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.