எசேக்கியேல் 39:9-15 தமிழ்

9 இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.

10 அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

11 அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.

12 இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும்.

13 தேசத்தின் ஜனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

14 தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்ற பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

15 தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.