எண்ணாகமம் 33:50-56 தமிழ்

50 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

51 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,

52 அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,

53 தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

54 சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.

55 நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்.

56 அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.