13 நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,
14 சர்வாங்க தகனபலியாக ஒருவருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,
15 ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்.
16 அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி,
17 ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
18 அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.
19 நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,