எரேமியா 13:11-17 தமிழ்

11 கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக்கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12 சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

13 அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,

14 பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

15 நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.

16 அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

17 நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.