எரேமியா 16:5-11 தமிழ்

5 ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும் அவர்களுக்கு பரிதபிக்காமலும் இருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6 இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள்நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

7 செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.

8 நீ அவர்களோடே புசித்துக்குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக.

9 ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

10 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேனென்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,

11 நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.