எரேமியா 18:17-23 தமிழ்

17 கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.

18 அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

19 கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

20 நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களை விட்டுத் திருப்பும்படிக்கு நான்அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும்.

21 ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

22 நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.

23 ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.