எரேமியா 19:7-13 தமிழ்

7 அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி, அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்து.

8 இந்த நகரத்தைப் பாழாகவும், ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

9 அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,

10 உன்னோடே கூடவந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு,

11 அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக்கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக, நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

12 இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.

13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.