எரேமியா 26:17-23 தமிழ்

17 தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி:

18 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போகும்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போகும் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.

19 அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.

20 கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.

21 யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.

22 அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்.

23 இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனை வெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.