எரேமியா 29:21-27 தமிழ்

21 என் நாமத்தைச் சொல்லி, உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.

22 பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக்குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

23 அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து, தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதினான்.

24 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:

25 நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்றஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

26 இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய எந்த மனுஷனையும் நீர் காவல் அறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே.

27 இப்போதும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனதோத் ஊரானாகிய எரேமியாவை நீர் கடிந்துகொள்ளாமற்போனதென்ன?