எரேமியா 40:4-10 தமிழ்

4 இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

5 அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.

6 அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

7 பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவச் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது.

8 அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.

9 அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப்பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.

10 நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.