எரேமியா 44:18-24 தமிழ்

18 நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து போனோம்.

19 மேலும் நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அநுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள்.

20 அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி:

21 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும், உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார்.

22 உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக்கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.

23 நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும், இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்.

24 பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.