எரேமியா 48:41-47 தமிழ்

41 கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.

42 மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.

43 மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

44 திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

45 வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினி ஜூவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப்தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.

46 மோவாபே, உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.

47 ஆனாலும் கடைசி நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.