எரேமியா 49:19-25 தமிழ்

19 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத்தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

20 ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.

21 அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.

22 இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

23 தமஸ்குவைக்குறித்துச் சொல்வது: ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்துபோகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை.

24 தமஸ்கு தளர்ந்துபோகும், புறங்காட்டி ஓடிப்போகும்; திகில் அதைப் பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.

25 சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே!