11 இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.
12 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.
13 நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.
14 மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.
15 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்,
16 உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?
17 இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.